En Per Aandal

Front Cover
Pustaka Digital Media, Apr 6, 2020 - Fiction - 235 pages

முகவுரை எழுதுவதைப்போல் கஷ்டமான காரியம் எதுவுமில்லை. (அதைப் படிப்பது அதை விடக் கஷ்டமான காரியம் என்பது வேறு விஷயம்!)

புத்தகம் எழுதுபவர்களுக்கு, புத்தகம் எழுதி முடித்த பிறகு பொதுவாக ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: முதலாவது: புத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பது? அடுத்தது: யாரிடம் முகவுரை எழுதி வாங்கிப் போடுவது? முதல் பிரச்சினையை அவரே முட்டி மோதி (மனைவியுடன்?) ஒரு மாதிரி ‘பிரமாதமான’த் தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிடுவார்.

முகவுரையை அப்படிச் சுலபமாகச் செய்ய முடியாது. முகவுரை எழுதுபவர் நண்பராக இருந்தால் நல்லது. எழுதி கொடுத்த பிறகும் தொடர்ந்து நண்பராக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது அச்சத்தால்!) ஓஹோ என்று பாராட்டி எழுதி விடுவார். புத்தகம் வெளியான பிறகு யாரும் அவரைக் கேள்வி கேட்டு குதறி எடுக்கமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும்!.

என் நண்பர் சுஜாதா தேசிகன், தன் புத்தகத்திற்கு நான்தான் முகவுரை எழுத வேண்டும் எண்று கண்டிப்புடனும் அன்புடனும் கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே அவருடைய கதைகளை, வலைப்பூவில் வந்த போது படித்துப் பாராட்டிக் கடிதம் எழுதியிருப்பதாலும் முகவுரை எழுதுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

வெவ்வேறு தளங்களில் கடந்த பல மாதங்களில் கதைகளைப் படித்து இருந்தாலும் எல்லாம் எனக்கு நினைவில் இல்லை, இப்போது தொகுப்பாகப் படிக்கும்போது, அதுவும் முன்னுரை எழுத வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கும்போது, புதிதாகப் பல சிறப்புகள். வித்தியாசமான பதப்பிரயோகங்கள், அதிரடியான திருப்பங்கள், மின்னல் போன்ற வர்ணனைகள் கண்ணில் பட்டன; ரசிக்கவும் முடிந்தன!

தமிழ் மொழி எத்தனையோ வகைப்படும். கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், மதுரைத் தமிழ், புகழ் பெற்ற மெட்ராஸ் தமிழ் (ஒரு காலத்தில் டிவியால் வளர்க்கப்பட்ட) ஜுனூன் தமிழ் என்று பல தமிழ்களுடன், பேச்சுத் தமிழ், இலக்கியத் தமிழ், (அரசியல் மேடைகளில் முழங்கும்) வசைத் தமிழ் என்று பலப் பல! சமீபகாலங்களில் கணினித்துறையில் உள்ள இளைஞர்கள் கதை எழுதுகிறர்கள். ஆன்மீகம் அலசுகிறார்கள்; நாலாயிரம் ரசிகர்களாக இருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். அவர்கள் எழுதும் (கணினித்?) தமிழ் வித்தியாசமான நடையில் இருப்பது மட்டுமல்ல, ஒரு வித ஈர்ப்புடனும் இருக்கிறது.

சுஜாதா தேசிகன் ஒரு கணிப் பொறியாளர். அவர் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அவருடைய தமிழ் நடை அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. பலர் இந்த நடையில் எழுதுகிறார்கள் என்றாலும், அதில் ஒரு சிலர் தான் பிசிறு இல்லாமல் எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் சுஜாதா தேசிகன்.

சின்னச் சின்ன சம்பவங்களிலும் ஒரு சுவாரசியமான கதை அம்சம் இருப்பதை இவருடைய கட்டுரைகள் காட்டுகின்றன. ஓட்டத்தைத் தடைபடுத்தாத, திடீரென்று ப்ரேக்கை அழுத்தி விடுவதைப் போன்று சில சொடக்குகள். அது வார்த்தையாக இருக்கலாம். நையாண்டி அடைமொழியாக இருக்கலாம். வர்ணனையாக இருக்கலாம். ஏன் முழு வாக்கியமாகவும் இருக்கலாம் அது கதைக்கு நேர்த்தியைச் சேர்த்து விடுகிறது. இது என் அனுபவம்.

இந்த தொகுதியில் உள்ள கதை, கட்டுரைகளைத் தனித் தனியாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யப் போவதில்லை. அவைகளைச் சிபாரிசு செய்கிறேன்.

சுஜாதா தேசிகனுக்கு வைஷ்ணவத்தில் ஈடுபாடு இருப்புது பல இடங்களில் தெரிகிறது. அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தின் மண்ணின் மணமும், காவிரித் தண்ணீரின் சுவையும் அவர் எழுத்தில் பிரதி பலிக்கின்றது.

நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவி “என்னமா கல கல என்று இருக்கிறது!” என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன்.

சில கட்டுரைகள் டெக்னிகலாக உள்ளன. என்னைப் போன்ற அப்பாவிகளை மிரட்டுகின்றன! இந்த முகவுரையை பார்த்த பிறகு அந்தக் கட்டுரைகளை நீக்கிவிட்டிருந்தாலும் நீக்கி இருப்பார்!

மொத்தத்தில் சுஜாதா தேசிகன் ஒரு ‘யூசர் ஃப்ரெண்ட்லி’ புத்தகத்தைத் தந்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகள்!

பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு)

அக்டோபர் 2012

 

Contents

Section 1
Section 2
Section 3
Section 4
Section 5
Section 6
Section 7
Section 8
Section 16
Section 17
Section 18
Section 19
Section 20
Section 21
Section 22
Section 23

Section 9
Section 10
Section 11
Section 12
Section 13
Section 14
Section 15
Section 24
Section 25
Section 26
Section 27
Section 28
Section 29
Section 30

About the author (2020)

‘சுஜாதா தேசிகன்’ என்ற பெயரில் பத்திரிக்கையிலும், சமூக ஊடகத்திலும் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். "தேசிகன் என் கதைகளில் ஒரு 'அத்தாரிட்டி'. பல சமயங்களில் நான் எழுதிய கதைகளைப் பற்றிய சந்தேகங்களை நானே அவரிடம் கேட்பேன். இந்த வருஷத்தில் என்ன பத்திரிகையில் எழுதியது என்று தெளிவாகத் தகவல் கொடுப்பார். ஓர் எழுத்தாளனுக்கு இவ்வகையிலான வாசகர்கள் அமைவது அதிர்ஷ்டமே!" என்று எழுத்தாளர் சுஜாதவிடம் பாராட்டுப் பெற்றவர்.

வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறார். நெருங்காதே நீரிழிவே என்று இவர் கல்கியில் எழுதிய தொடர் வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றது.

Bibliographic information